ரயிலில் சிக்கி 2 பேர் பலி
பெரம்பூர்: வியாசர்பாடி- பேசின்பிரிட்ஜ் இடையே ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் பலியானார். இதுகுறித்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று காலை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று காலை 9.55 மணி அளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்திற்கும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே வந்தபோது அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயற்சி செய்தபோது ரயில் மோதியதில் இன்ஜினின் அடியில் மாட்டிக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. உடனடியாக இந்த தகவல் பெரம்பூர் இருப்பு பாதை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற பெரம்பூர் இருப்பு பாதை போலீசார் ரயில் இன்ஜினில் சிக்கிய நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காலை 10.20 மணிக்கு மீண்டும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் நோக்கி புறப்பட்டு சென்றது. திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் அதே இடத்தில் சுமார் 25 நிமிடங்கள் நின்றதால் சென்ட்ரல் நோக்கி வரும் மின்சார ரயில்கள் அடுத்தடுத்து சிக்னல் கிடைக்காமல் நின்றன.
இதனால் வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் நின்ற மின்சார ரயிலில் இருந்து பயணிகள் ஆங்காங்கே உள்ள சாலைகளுக்கு நடந்து செல்ல ஆரம்பித்தனர். சுமார் 25 நிமிடங்கள் கழித்து ரயில் சேவை மீண்டும் சீரானது. பெரம்பூர் இருப்புப்பாதை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மகிமை ராஜ் (67) என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவர் ரயிலில் எவ்வாறு சிக்கி உயிரிழந்தார் என்பது குறித்து பெரம்பூர் இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து குரோம்பேட்டை செல்லும் ரயில்வே வழித்தடத்தில், நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி இறந்து கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார், இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த நபருக்கு 40 வயது இருக்கும் என்றும், அவர் ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, வேகமாக வந்த ரயில் மோதி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றாரா அல்லது ரயில் வருவதை கவனிக்காமல் நடந்து செல்லும்போது ரயிலில் அடிபட்டு இருந்தாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.