மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ெவளியிட்ட அறிவிப்பு: “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2022-23 நிதியாண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளை பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.

விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்பு தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 1.5.2025. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *