குழந்தை, சிறுவன் உட்பட 7 பேரை குதறிய தெருநாய் தொடரும் அவலம்! வீட்டு வாசலில் நிற்கவே பொதுமக்களுக்கு அச்சம்

சென்னை :தெருநாய்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறும் நிலையில், நேற்று ஒரே நாளில் வேளச்சேரியில், 7 மாத குழந்தை, 9 வயது சிறுவன் உட்பட ஏழு பேரை, தெருநாய் கடித்துக் குதறியுள்ளது. வீட்டிற்கு வெளியே நின்றாலும், வாகனங்கள், நடந்து சென்றாலும், அவை கூட்டமாக துரத்திக் கடிப்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்தாண்டு, 48,583 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியாமலும், வளர்ப்பு நாய்கள் குறித்த கணக்கெடுப்பை முழுதாக எடுக்க முடியாமலும், சென்னை மாநகராட்சி திணறி வருகிறது.

இதனால், சாலையில் செல்வோரை மட்டுமின்றி, வீட்டுக்கு வெளியில் நிற்போரையும், நாய்கள் கடித்துக் குதறும் சம்பவம், சென்னையில் தொடர்கிறது. நாய்க்கடியால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு மே மாதம், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 5 வயது சிறுமியை, ‘ராட்வீலர்’ இனத்தைச் சேர்ந்த, இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறின. அதே மாதம், ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில், 5 வயது சிறுவனையும் நாய் கடித்தது.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, சூளைமேடு பகுதியில் கடைக்கு சென்ற கணவன் சுரேஷ், மனைவி நீலா ஆகியோரை தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் காயம்அடைந்தனர்.

இதுபோன்ற வளர்ப்பு நாய்கள் மற்றும் தெருநாய்கள் மனிதர்களை துரத்திக் கடித்து வந்த சம்பவம் தொடர்ந்து வந்ததால், நாய் வளர்ப்போர் மற்றும் தெருநாய்களுக்கு உணவு அளிப்போருக்கு, மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

நாளடைவில், அக்கட்டுப்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் மறந்ததால், சென்னையில் ஒரே நாளில், இரண்டு குழந்தைகள் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

வேளச்சேரி, பாரதி நகரைச் சேர்ந்த நாகேந்திரன். இவரது ஏழு மாத மகள் கதிர்மதிக்கு, நாகேந்திரனின் தாய் நேற்று, வீட்டிற்கு வெளியே நின்று உணவு ஊட்டிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த தெருநாய், அவரை கடிக்க வந்தபோது, அந்நாயை தடுத்துள்ளார். அப்போது, இடுப்பில் இருந்த ஏழு மாத கதிர்மதியின் வலது தொடையில் தெருநாய் கடித்தது.

அதேபோல், வேளச்சேரி பேபிநகரைச் சேர்ந்த ஹாப்யூஸ் என்பவரின் மகன் அஷ்ரப்புல், 9, என்ற சிறுவன், அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவனது வலது காலில் தெருநாய் கடித்தது. அதேபோல், மேலும் ஐந்து பேரையும் நாய் கடித்துள்ளது. நாய் கடிப்பட்ட ஏழு பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரிகள் நேற்று, வேளச்சேரி பகுதியில், தெருநாய்கள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, கால்நடை டாக்டர் ஆதிரை கூறுகையில், ”இரண்டு நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளை கடித்த நாய், இன்றைக்குள் பிடிக்கப்படும். இருவரையும் ஒரே நாய் கடித்ததா என்பது தெரியவில்லை. வேளச்சேரி பகுதியில், தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்படும்,” என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில், ஒவ்வொரு ஆண்டும் 20,000க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. மேலும், புகாரின் அடிப்படையில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்தாண்டு மட்டும் தெருநாய் தொல்லைகள் குறித்து, 22,229 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது, தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து மண்டலங்களிலும், நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சிக்கு தோல்வி

நாய்க்கடி சம்பவம் குறித்து, பொதுமக்கள் கூறியதாவது: சென்னையில் இரவு நேரங்களில், வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இரவு நேரத்தில், குப்பைத் தொட்டி வைத்திருக்கும் பகுதியை கடக்கவே அச்சமாக உள்ளது. குப்பைத் தொட்டியை கிளறி, சாப்பிடும் வெறியில் இருக்கின்றன. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றாலும், நடந்து சென்றாலும், கூட்டம் கூட்டமாக துரத்திச் சென்று கடிக்கின்றன. தற்போது, பகலில் வீட்டிற்கு வெளியே நின்றாலும், தெருநாய் கடிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வந்தாலும், அவற்றை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை. குறிப்பாக, தடுப்பூசி போடப்படாத மற்றும் கருத்தடை செய்யப்படாத நாய்களை கண்டறிவதில், மாநகராட்சி தோல்வி அடைந்துள்ளது.தடுப்பூசி போடப்படாமல், தெருநாய்கள் வெறிபிடித்து மனிதர்களை கடித்து வருகிறது. இதற்கு மாநகராட்சி மற்றும் அரசு உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னையில் கடந்த 2018ல் நடந்த கணக்கெடுப்பில், 59,000 தெருநாய்கள் இருந்தன. 2024ல் அவை 1.80 லட்சமாக அதிகரித்து உள்ளன. மூன்று மடங்கு தெருநாய்கள் அதிகரித்துள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், மாநகராட்சி திணறி வருகிறது.

நாய்க்கடிக்கு ஆளானோர்சென்னை – 11,704செங்கல்பட்டு – 17,076 திருவள்ளூர் – 15,191 காஞ்சிபுரம் - 4,612கடந்தாண்டில் மட்டும் 48,583 பேர், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

450 நாய், 30 பூனைகளுக்கு

சிட்லப்பாக்கத்தில் தடுப்பூசிதாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறை, புளூ கிராஸ் ஆப் இந்தியா மற்றும் எச்.சி.எல்., அறக்கட்டளை இணைந்து நடத்திய, நாய்களுக்கான இரண்டு நாள் இலவச தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது. குரோம்பேட்டையை அடுத்த சிட்லப்பாக்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த முகாமில், முதல் நாளான நேற்று, 250 வீட்டு நாய்கள், 30 பூனைகள் மற்றும் 200 தெருநாய்களுக்கு ரேபிஸ், பார்வோ வைரஸ் மற்றும் டிஸ்டெம்பர் ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *