மாநகர பஸ்களை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட பெண்கள்

செம்மஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து, தாம்பரத்திற்கு தடம் எண்: 99சி என்ற பேருந்து இயக்கப்பட்டது. இதனால், செம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம் பகுதிவாசிகள், இரண்டு பேருந்துகள் ஏறி, சோழிங்கநல்லுார் சுற்றி செல்ல வேண்டி இருந்தது. இதனால், வேலைகளுக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில், பொலினினி, நுாக்கம்பாளையம் பகுதியில் சாலை சீரமைக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் பேருந்து இயக்கப்படுகிறது.

‘செம்மஞ்சேரியில் இருந்து முதல் பேருந்து, அதிகாலை 4:50 மணிக்கும், கடைசி பேருந்து, இரவு 8:20 மணிக்கும் என, இதற்கிடையில் 45 நிமிடத்திற்கு ஒரு நடை வீதம் பேருந்து இயக்கப்படும்’ என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்தது.

ஆனால், அறிவித்தபடி முறையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பகுதிவாசிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் ’99சி’ பேருந்துகளை அதிகப்படுத்தவும், உரிய நேரத்தில் இயக்கவும், நேற்று மாலை செம்மஞ்சேரியைச் சேர்ந்த பெண்கள் ஒருங்கிணைந்து மாநகர பேருந்துக்களை சிறைபிடித்தனர்.

போலீசார் மற்றும் போக்குவரத்து கழகத்தினர் கூடுதல் பேருந்துகளை, உரிய நேரத்தில் இயக்குவதாக உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

பஸ்சில் கல்வீச்சு: மாணவியர் காயம்

திருவள்ளூர், பொன்னேரியில் இருந்து தேர்வாய் நோக்கி, தடம் எண்: ‘டி37’ அரசு பேருந்து, நேற்று முன்தினம் இரவு சென்றது. மாணவ – மாணவியர் உட்பட பலர் பயணித்தனர். சில மாணவர்கள், படிக்கட்டில் நின்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுனர் கண்டித்து தண்டலச்சேரியில் இறக்கிவிட்டார்.

இந்த நிலையில், பேருந்தை டூ – -வீலரில் பின்தொடர்ந்த இருவர், கல் வீசியதில் பின்புற கண்ணாடி உடைந்து, மாணவியர் பிரியதர்ஷினி, 17, திவ்யா, 17, ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *