சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கைதான இருவரின் கை, கால் முறிவு: மருத்துவமனையில் சிகிச்சை
செங்கல்பட்டு, பிப்.8: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே கடந்த 3ம் தேதி நள்ளிரவு, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிறுமி பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர், உதவி செய்வது போல் நடித்து, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார், நெற்குன்றம் அருகே கடத்தல் ஆட்டோவை நெருங்கியபோது, சிறுமியை கீழே தள்ளிவிட்டு, 3 பேரும் தப்பினர். அவர்களை தேடி வந்தனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து தாம்பரம் மாநகர காவல்துறையினர், இந்த வழக்கில் ராயப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழ்செல்வன், இவரது நண்பர் தயாளன் ஆகிய இருவரை கைது செய்ய முயன்றபோது, இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றனர். இதில் ஒருவருக்கு கையும், மற்றொருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குரோம்பேட்டை மருத்துவமனையில் இருவருக்கும் மாவு கட்டு போடப்பட்டு கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று 2 பேரையும் செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. தொடர்ந்து இருவரையும் செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான 2 பேரையும், வரும் 21ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிட்டுள்ளார். மேலும் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகள் சிகிச்சை பெரும் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.