விதவிதமான ‘கெட் அப்’பில் விஜயபானு ஐ.பி. எஸ் ., அதிகாரியாக நடித்து பெண் போலீசிடம் நகை பறிப்பு

சென்னை:சேலத்தில் அறக்கட்டளை நடத்தி, 500 கோடி ரூபாய் மோசடி செய்த பெண், ‘டுபாக்கூர்’ ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து, போலீஸ்காரரிடம் நகை மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நடத்தி, 500 கோடி ரூபாய் மோசடி செய்த வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபானு, அவரின் கூட்டாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், விஜயபானு, போலி ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து, நகை மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்து உள்ளது.

சிறப்பு பிரிவு

இது குறித்து, போலீசார் கூறியதாவது:

கடந்த 2012ல் விஜயபானு பண மோசடி வழக்கில் கைதாகி, சென்னை புழல் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த சிறையில், 2007 – 2010 வரை, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா என்ற தலைமை காவலர் பணிபுரிந்தார்.

அவரிடம், தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி என விஜயபானு அறிமுகம் செய்துள்ளார். டில்லியில் சிறப்பு பிரிவில் பணிபுரிவதாகவும், சிறையில் நடக்கும் ஊழலை கண்காணிக்க கைதாகி, சிறைக்கு வந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

22 சவரன் நகை

ஜாமினில் வெளி வந்த பின், விஜயாவை வேலுாரில் உள்ள தன் வீட்டிற்கு விஜயபானு வரவழைத்துள்ளார். அப்போது, ஐ.பி.எஸ்., அதிகாரிக்கான சீருடை அணிந்து வரவேற்றுள்ளார். விஜயாவிடம், 22 சவரன் நகை வாங்கி மோசடி செய்துள்ளார்.

விஜயபானு, புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண் பேடி போலவும் உடை அணிந்து வந்துள்ளார். ஆண்களை போல தலைமுடியை வெட்டிக் கொள்ளும் அவர், விதவிதமான ‘கெட் அப்’பில் வலம் வந்து, மக்களை ஏமாற்றியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *