மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு தரும் ஊழியரின் சொத்து மதிப்பு ரூ.4 கோடி ‘பலே’ வேலை பார்த்து காஞ்சியில் மனைகள் வாங்கி குவிப்பு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், டெம்பிள்சிட்டி பகுதியில் வசிப்பவர் கண்ணன், 55; காஞ்சிபுரம் மாநகராட்சியில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் ‘பிட்டர்’ ஊழியர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீதும், அவரது மனைவி கஜலட்சுமி, 49, மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். கணக்கில் வராத 2.16 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, 4 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்துக்களை வாங்கியுள்ளதாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மனைவி பெயரில் கண்ணன் வாங்கிய சொத்துக்கள்
பெரிய கரும்பூர், அகிலாண்டேஸ்வரி நகரில், 1,200 சதுரடி வீட்டு மனையை, 2007ல் மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்
காஞ்சிபுரம், முல்லாபாளையம் தெருவில் பூர்வீக சொத்து, 1,537 சதுரடி வீடு, 2010ல் பெற்றுள்ளார்
காஞ்சிபுரம், அரப்பணஞ்சேரியில் 903 சதுரடி வீட்டுமனை வாங்கி, மனைவி பெயரில் 2013ல் பதிவு செய்துள்ளார்
சின்ன காஞ்சிபுரத்தில், 912 மற்றும் 891 சதுரடி என, இரு வீட்டுமனைகள் வாங்கி, தன் மனைவி பெயரில் 2014 மற்றும் 2019ல் பதிவு செய்துள்ளார்
காஞ்சிபுரம், தும்பவனத்தில் 2,368 சதுரடி வீட்டுமனையை மனைவி பெயரில் 2014ல் பதிவு செய்துள்ளார்
சின்ன காஞ்சிபுரத்தில், 954 சதுரடி வீட்டுமனை 2020ல் மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்
தும்பவனம் பட்டரையில், 1,066 சதுரடி வாங்கி, 2014ல் மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த இடத்தில் கிடங்கு ஒன்றை கட்டியுள்ளார்
தும்பவனம் பட்டரையில், 1,044 சதுரடி வாங்கி, 2014ல் மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்
தும்பவனம், காமாட்சியம்மன் அவென்யூவில் 1,500 சதுரடி உடைய இடம் மற்றும் வீட்டை மனைவி பெயரில் 2017ல் பதிவு செய்துள்ளார்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் 416 சதுரடியில் வாங்கிய வீட்டை 2017ல் மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்
நத்தப்பேட்டையில், 2,100 சதுரடி வீட்டு மனையை மனைவி பெயரில் 2020ல் பதிவு செய்துள்ளார். இங்கு, பெரிய கிடங்கு ஒன்று கட்டியுள்ளார்
அசையும் சொத்தாக கண்ணனின் மகள் பெயரில் 2018ல் ஒரு ஸ்கூட்டரும், மனைவி பெயரில் நான்கு சரக்கு வாகனங்களும், ஒரு ஸ்கூட்டரும் வாங்கியுள்ளார்.