லட்சக்கணக்கில் சிக்கிய செல்லாத ரூபாய் நோட்டுகள்
போரூர்,குன்றத்துார் சாலை, எம்.எஸ்., நகர் அருகே, போரூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் வந்த இருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில், 28 லட்சம் ரூபாய் மதிப்புடைய, செல்லாத பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், பிடிபட்டவர்கள் அனகாபுத்துார் நேதாஜி தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 34, பாலாஜி நகர் அங்குராஜ், 37, என்பது தெரியவந்தது. இருவரும் ரியல் எஸ்டேட், பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்வதும் தெரிந்தது.
மேலும், பண மதிப்பிழப்பின்போது சீர்காழியைச் சேர்ந்த சதாம் என்பவர் வெளிநாட்டில் இருந்ததால், அவரிடம் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமல் இருப்பதாகவும், அவரது, 28 லட்சம் ரூபாயை மாற்றி தந்தால், அதற்கான கமிஷன் தருவதாகவும் கூறி, இஸ்மாயில் என்பவர், இவர்களிடம் அணுகியுள்ளார்.
இதையடுத்து, ரஞ்சித்குமார், அங்குராஜ் ஆகியோர், சீர்காழியைச் சேர்ந்த சதாமின், 28 லட்சம் ரூபாய் மதிப்பு பழைய 500, 1,000 நோட்டுகளை, இஸ்மாயில் நண்பரான கோயம்பேடைச் சேர்ந்த விக்கி என்பவரிடம் பெற்றுள்ளனர்.
இந்த பணத்தை மாற்றுவதற்காக, 20 நாட்களாக பல இடங்களில் ரஞ்சித்குமார், அங்குராஜ் ஆகியோர் அலைந்துள்ளனர்.
இந்நிலையில், வடபழனியில் ஒருவரிடம் இந்த பணத்தை மாற்ற சென்றபோது, போலீசாரின் சோதனையில் இருவரும் சிக்கியதும் தெரியவந்தது.
செல்லாத நோட்டுகளை வாங்கி விற்கும் கும்பல் இன்னும் உள்ளதா அல்லது செல்லாத நோட்டுகளை விற்று தருவதாக கூறி, இருவரிடமும் பணம் பறிக்க முயற்சித்தனரா என, போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.