பள்ளி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு போக்சோ வழக்கை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை: பெ.ச ண்முகம் வலியுறுத்தல்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வந்த 8ம் வகுப்பு சிறுமியை அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 3 பேர் வெகுநாட்களாக கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளதும், நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளதும் மனதை பதைபதைக்க வைக்கிறது. இந்த படுமோசமான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் இதுபோன்று வேறு கூட்டு பாலியல் வல்லுறவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தீர விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் 3 பேரும் தப்பித்துவிடாமல் போக்சோ சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள வழக்கை துரிதப்படுத்தி காலம் தாழ்த்தாமல் உரிய தண்டனை பெற்றுத்தர வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், மாணவிக்கு உரிய கவுன்சிலிங் அளித்து அவர் தொடர்ந்து பள்ளி படிப்பை தொடர்வதற்கும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.