வட சென்னை பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு
சென்னை: வடசென்னை பகுதியில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்த மேயர் பிரியா, பணிகளை விரைந்து முடித்து பயன்பாடுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் 44வது வார்டுக்குட்பட்ட பாடசாலை தெரு, கக்கன்ஜி காலனியில் மேயர் மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள இரவு பாடசாலை மற்றும் மாணவர் திறன் மேம்பாட்டு மைய கட்டடத்திற்கான பணியை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, பெரம்பூர், புதிய காமராஜர் நகர் சென்னை நடுநிலைப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.4.59 கோடி மதிப்பில் 3 தளங்கள் மற்றும் 2 குழந்தை மையங்களுக்கான கூடுதல் பள்ளிக் கட்டிட பணியினையும், மூலதன நிதியில் ரூ.86 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, 44 மற்றும் 71வது வார்டுக்குட்பட்ட மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்ட நிதியில் ரூ.2.13 கோடி மதிப்பில் 635 மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு மேயர் பிரியா அறிவுறுத்தினார். ஆய்வின்போது, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், வடக்கு வட்டார துணை ஆணையாளர் (பொ) பிரவீன் குமார், நிலை குழுத் தலைவர் சர்ப ஜெயா தாஸ் நரேந்திரன், மண்டலக்குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.