அரசு பணி நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படுவதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசு தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 1997ம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களை நிரந்தரம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்கிறது.

பல்கலைக்கழகங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிப்பது என்பது மிகப்பெரிய மோசடியாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் எதிர்காலத்தில் சட்ட விரோதமாக பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், தேர்வு நடைமுறைகளை பின்பற்றியே நியமனங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தலைமைச் செயலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வாரா என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்து வரும் 13ம் தேதி பதில் அளிக்குமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *