பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை திட்டமிட்டபடி பிப்.11ல் போராட்டம்: டாஸ்மாக் பணியாளர்கள் தகவல்
சென்னை: பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வரும் 11ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்ந்த பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவித்து நிறைவேற்றி தருவதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தை கைவிடவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் டாஸ்மாக் நிர்வாகத்தின் உறுதியை ஏற்க பணியாளர் சங்கத்தினர் மறுத்து விட்டனர். மேலும் திட்டமிட்டப்படி பிப்.11ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தையில், மேலாண்மை இயக்குநர் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி செயல்படுத்துவதாக தெரிவித்தார். 22 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு இதுநாள் வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, இன்னும் 4,5 நாட்களில் எப்படி நிறைவேற்றப்படும் என தெரியவில்லை. எனவே திட்டமிட்டப்படி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேச்சுவார்த்தைக்கு முன் தொமுச மாநில தலைவர் நடராஜன் டாஸ்மாக் மேலாண் இயக்குநரை பேசினார். இதுகுறித்து கூறிய அவர், மேலாண்மை இயக்குனரை சந்தித்து பேசியுள்ளேன். தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றார்.