வில்லிவாக்கம் பஸ் நிலையம் மெட்ரோ ரயில் பணி காரணமாக ஐசிஎப்க்கு மாற்றம்
சென்னை: மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த பேருந்து நிலையத்திலிருந்து 7 வழித்தடங்களில் இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக வரும் 9ம் தேதி முதல் ஐசிஎப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. அதன்படி, தடம் எண்.20, 27டி, 23வி ஆகிய பேருந்துகள் ஐசிஎப் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று யு டர்ன் எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பேருந்து நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்திலேயே இயக்கப்படும். வில்லிவாக்கத்திலிருந்து இயக்கப்பட்ட சிற்றுந்து தடம் எண்கள்.எஸ்.43, எஸ்.44 ஆகியவை பயணிகள் வசதிக்காக வழக்கம்போல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும். வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட தடம் எண்.22 பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டு கொரட்டூர் வரையும், திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட தடம் எண்.63 பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டு ஐசிஎப் வரை இயக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.