பெற்றோர் பிரிந்து சென்றதால் தனியாக வசித்து வந்த சிறுவன் தற்கொலை
சென்னை: வியாசர்பாடி பெரியார் நகர் வஉசி தெருவை சேர்ந்த கிஷோர் குமார் (15), சர்மா நகர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததால், சிறுவன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுவன், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார், கிஷோர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிமையில் இருந்ததால் சிறுவன் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* வியாசர்பாடி பி.வி காலனி கரிமேடு 1வது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (28). இவரது மனைவி நித்யா (24), மகன் ரிஷி (2). தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் நித்யாவை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்யா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நித்யாவின் தந்தை ராஜி (56) எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் மருமகன் மீது புகார் அளித்துள்ளார்.
* ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சத்யாநந்த பால் (20). இவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பத்மநாபா நகர், சம்பந்தனார் தெருவில் உள்ள பழைய துணிகளை வாங்கி விற்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சத்யாநந்த பால், ஒடிசாவில் உள்ள தனது பெற்றோரிடம் போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.