கேப்டன் கெனால் பகுதியில் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்

பெரம்பூர்: வியாசர்பாடியில் கேப்டன் கால்வாயில் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் மழை காலம் முடிந்து தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ளது. இந்த நேரத்தில் இரவு மற்றும் காலை வேளையில் பணி அதிகமாக உள்ளது. பொதுவாக, இந்த நேரத்தில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். குறிப்பாக, கால்வாய் கெனால் உள்ள பகுதிகளில் கொசு தொல்லை அதிகமாக இருக்கும் என்பதால்  சென்னை மாநகராட்சி சார்பில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வியாசர்பாடி 37வது வார்டுக்கு உட்பட்ட கேப்டன் கெனால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதாகவும், இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் டில்லிபாவுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சென்னை தண்டையார்பேட்டை மண்டல மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரவி, 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் டெல்லி பாபு உள்ளிட்டோர் கேப்டன் கெனால் கால்வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்து இடங்களிலும் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை நேற்று மேற்கொண்டனர்.

பொதுவாக, ஆட்கள் உள்ளே இறங்கி மருந்து தெளித்தால் நீண்ட நேரம் ஆகும் என்பதாலும், ஒரே நாளில் பணிகளை முடிக்க முடியாது என்ற காரணத்தினாலும் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பதாகவும் இதன் மூலம் பரவலாக அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு கொசு முட்டைகள் உற்பத்தியாவது தடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இதேபோன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கால்வாய் உள்ள பகுதிகளில் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *