முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

 சென்னை: முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 26.6.2024 அன்று 2025ம் ஆண்டிற்கான பொதுத்துறை மானிய கோரிக்கையின் போது, முன்னாள் படைவீர் நலன் சார்ந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி, முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாத தையற் பயிற்சி சான்று பெற்றிருப்பின் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பயிற்சி வழங்கிய நிறுவனத்தால் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படாத நிலையில் ஒரு முறை மட்டும் தையல் இயந்திரம் வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டார். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு, சைதாப்பேட்டையில் உள்ள உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக 044-22350780 தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *