கட்டுப்பாட்டை இழந்து ஏ.டி.எம் .,மில் புகுந்த கார்
அண்ணா நகர், சூரப்பட்டு, புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன், 27; போட்டோகிராபர். இவரது மனைவி யோகஸ்ரீ, 23; தனியார் நிறுவன ஊழியர்.
தம்பதி இருவரும், நேற்று நள்ளிரவு அவர்களது நண்பர்களான மாதவரத்தைச் சேர்ந்த பிலஸ்மோன், 24, கொளத்துாரைச் சேர்ந்த ரிஷாத், 24, மற்றும் அவரது மனைவி லட்சுமி, 23, ஆகியோருடன், ‘ரெனால்ட் ட்ரைபர்’ காரில், கொளத்துாரில் இருந்து அண்ணா நகருக்கு வந்தனர்.
காரை லோகேஷ்வரன் ஓட்டி வந்தார். திருமங்கலத்தில் இருந்து, அண்ணா நகர் ரவுண்டானாவை நோக்கி, 2வது அவென்யூவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று அண்ணா டவர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், நடைபாதை தடுப்பு கற்களை உடைத்து, தனியார் வங்கி ஏ.டி.எம்., மையத்திற்குள் பாய்ந்தது. இதில் ஏ.டி.எம்., நுழைவாயில் கண்ணாடி கதவு நொறுங்கியது.
தகவலறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரில் சிக்கிய ஐந்து பேரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி தப்பினர். சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.