‘ஸ்பைடர்மேன் ‘ போல் சாகசம் ஐஸ்கிரீம் கடைக்காரர் மீது வழக்கு
சென்னை, அண்ணா சாலை – ஜி.பி., சாலை சந்திப்பில், உணவு பிரியர்களை கவரும் வகையில் ஏராளமான கடைகள் உள்ளன.
இங்குள்ள கடைக்காரர்கள் ஒவ்வொருவரும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சலுகைகள், கடையின் முகப்புகள், வித்தியாசமான அலங்காரங்களில் கடை பெயர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பிலால் ஹோட்டல் அருகே, புதிதாக நடைபாதையில் ஐஸ்கிரீம் கடை ஒன்றை, ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது என்பவர் துவங்கி உள்ளார்.
அவரது கடையை பிரபலப்படுத்தவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், நேற்று முன்தினம் நள்ளிரவு, ‘ஸ்பைடர்மேன்’ ஆடை அணிந்து, அங்குள்ள கட்டடத்தின் மேல் நின்று சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதை, அங்கு வந்த உணவு பிரியர்கள் மட்டுமின்றி, அவ்வழியாக சென்றோரும் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த திருவல்லிக்கேணி போலீசார், கட்டடத்தின் மீது ஏறி சாகசத்தில் ஈடுபட்டவரை கீழே இறக்கி, எச்சரித்து அனுப்பினர். நேற்று காலை, சாகசத்தில் ஈடுபட்ட சையது மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், கடையின் விளம்பரத்திற்காக இதுபோன்று மீண்டும் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அவரை எச்சரித்தனர்.