குறை தீர்க்கும் முகாமில் தீக்குளிக்க முயன்ற பெண்

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் மின்னல் கொடி, 40. அவரது கணவர் இறந்த நிலையில், இரண்டாவதாக மணிவாசகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மணிவாசகம், பேக்கரி நடத்தப் போவதாக கூறி, மின்னல் கொடியின் நகைகளை விற்று, 20 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மின்னல் கொடி கேட்டபோது, தகராறு செய்து பிரிந்து சென்றார்.

இந்நிலையில், மின்னல் கொடி வசித்து வரும் வீட்டை, மணிவாசகம், தன் மூன்றாவது மனைவியின் மகளுக்கு எழுதி வைத்துள்ளார்.

அவர், அந்த வீட்டை சந்திரமவுலி என்பவருக்கு பொது அதிகாரம் எழுதிக் கொடுத்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன், மின்னல்கொடி வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் சிலர், கதவை உடைத்து உள்ளே சென்று, பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதுகுறித்து, மின்னல்கொடி திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்னல் கொடி, நேற்று காலை திருமுல்லைவாயில் போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடந்த குறைதீர்க்கும் முகாமிற்கு சென்றார். கமிஷனர் சங்கர் முன், பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை தடுத்து, விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *