ஓ. எஸ் .ஆர் . நிலங்கள் கபளீகரம். பூங்கா விற்பனைக்கு சாலைகளையும் விற்க முயற்சி
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ரோகினி கார்டன் பகுதியில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டத்தில், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பூங்காவை மட்டுமின்றி சாலையையும் தனியாருக்கு விற்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டுவசதி வாரியம் சார்பில், 1977ல் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கு, 48 கிரவுண்ட் நிலத்தில், பூங்கா, சாலைகளுக்கு இடம் விட்டு, 136 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
ரோகினி கார்டன் என பெயரிடப்பட்டுள்ள இந்த வளாகத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் வீடு வாங்கி குடியிருந்து வருகின்றனர். இங்கு, 40 ஆண்டுகளை கடந்த நிலையில், கட்டடங்கள் சிதிலமடைந்துள்ளன.
எனவே, இந்த வளாகத்தை தனியார் கட்டுமான நிறுவனம் வாயிலாக மறு மேம்பாடு செய்ய, வீட்டு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்காக கட்டுமான நிறுவன தேர்வுக்காக, நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பில், ‘இங்குள்ள, 48 கிரவுண்ட் நிலத்தை மறு மேம்பாடு செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. ஆனால், வீட்டுவசதி வாரியம் இங்கு குடியிருப்பு செயல்படுத்தியபோது, சாலை, பூங்காவுக்கான நிலங்களை மாநகராட்சிக்கு
ஒப்படைத்துள்ளது.
தற்போது, மாநகராட்சிக்கு ஒப்படைத்த நிலத்தையும் சேர்த்து, மறு மேம்பாடு செய்வது சரியா என, இங்குள்ள ஒதுக்கீட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராஜா அண்ணாமலைபுரத்தில், ரோகினி கார்டன் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தியபோது, நகர், ஊரமைப்பு சட்ட விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டன.
இங்கு பொதுமக்களுக்கு, 136 வீடுகள் ஒதுக்கப்பட்டபோது, உட்புற சாலைகளுக்காக, 20.62 கிரவுண்ட் நிலமும், திறந்தவெளி ஒதுக்கீடு அடிப்படையில் பூங்கா அமைக்க, 10.49 கிரவுண்ட் நிலமும், சென்னை மாநகராட்சியிடம், 1987ம் ஆண்டு முறையாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், இங்கு சாலை மற்றும் பூங்கா மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. ஆவணங்கள் அடிப்படையில் இந்த நிலம், தற்போது மாநகராட்சிக்கு சொந்தமானது.
இங்கு வீடு வாங்கிய ஒதுக்கீட்டாளர்கள், தங்களுக்கான விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தை மட்டுமே, அவர்கள் மறு மேம்பாட்டுக்காக பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கு சாலைகள், பூங்காவை தனியாருக்கு விற்க முயற்சி நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாநகராட்சி பெயருக்கு பட்டா பெற வலியுறுத்தி உள்ளனர்.
இந்த பின்னணியில், இங்கு சாலை, பூங்காவை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்க, இங்குள்ள சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, தங்கள் நிலத்தை பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
– நமது நிருபர் –