சமாதி கல்வெட்டுகள் இடுகாட்டில் உடைப்பு
பழவந்தாங்கல், சென்னை, தில்லை கங்கா நகர், இரண்டாவது பிரதான சாலையில், ஆதிதிராவிட சமூகத்தினர் பயன்பாட்டிற்காக, இடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது.
இடுகாட்டில் புதைக்கப்பட்ட ஒருவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று அவரது சமாதியில் உறவினர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்த சென்றனர். அப்போது, நினைவு கல்வெட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல, ஆறுக்கும் மேற்பட்ட சமாதிகளின் கல்வெட்டுகள் உடைக்கப்பட்டும், சில கல்வெட்டுகளில் பிறப்பு, இறப்பு குறித்த தகவல்கள் மட்டும் உடைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல் பழவந்தாங்கல் பகுதியில் பரவியது.
இடுகாட்டிற்கு விரைந்து அவற்றை பார்வையிட்டவர்கள், இது குறித்து மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டனர்.
அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரியவித்தனர். இது தொடர்பாக ஊர் மக்கள் சார்பில், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.