படிப்பை பாதியில் நிறுத்தாதீர் இன்ஸ் பெக்டர் ஆலோசனை
சென்னை, பெரும்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ‘போக்சோ’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், செம்மஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் கோமதி பேசியதாவது:
இங்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் அதிகமாக உள்ளதால், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
தொடர் விழிப்புணர்வு வழங்கியதால், கடந்த சில ஆண்டுகளை விட, பெண்கள், பெண் குழந்தைகள் தொடர்பான வழக்குகள் குறைவாக பதிவாகின்றன.
போக்சோ வழக்கு வருவதற்கு முன், வராமல் தடுப்பது தான் காவல் துறையின் முக்கிய நோக்கம். கல்வியை முடித்தபின் தான் வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
யாராவது தொல்லை கொடுத்தால், மகளிர் போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு மையம், சமூக ஆர்வலர்களிடம் உடனே தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். படிப்பு, பணி, திருமணம் போன்றவற்றில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியம்.
தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்றாலும், வீட்டிற்கு வந்தபின் பெண் குழந்தை மீது, அதிக அக்கறை செலுத்த வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது.
மனதளவில் பிரச்னை இருந்தால், உடனே அம்மாவிடம் கூற வேண்டும். இல்லையென்றால், பள்ளி ஆசிரியர்களிடம் கூறி தீர்வு காண வேண்டும். எல்லா பிரச்னைகளையும் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.