சென்னை ஐஐடி இணையதளத்தில் இந்திய அளவில் புற்று நோய்களின் மரபணு திரிபுகள் குறித்த தரவுகள் வெளியீடு
சென்னை, பிப்.4: உலகப் புற்றுநோய் தினம் இன்று (பிப்.4) அனுசரிக்கப்படும் நிலையில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும், 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் உள்ள போதும், உலகளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக இருப்பதாகவே ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் புற்றுநோய்களுக்கென தனியாக மரபணுக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், இந்தியாவில் புற்றுநோயின் குறிப்பிட்ட திரிபுகளைக் கண்டறியக்கூடிய நோய் கண்டறியும் சாதனங்களோ, மருத்து வகைகளோ இல்லை. இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டில் சென்னை ஐஐடி தொடங்கியது. இதன் கீழ் நாடு முழுவதிலுமிருந்து 480 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் புற்றுநோய் திசு மாதிரிகளில் இருந்து 960 மரபணு மாதிரி கண்டறியப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகள் குறித்த தரவுகள் bcga.iitm.ac.in என்ற தளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய மார்பகப் புற்றுநோய் மரபணு வரிசை உருவாக்கம் நிறைவடைந்ததாக அறிவித்தத சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ‘பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை நேற்று வெளியிட்டார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, நாட்டில் உள்ள வெவ்வேறு புற்றுநோய்களுக்கான மரபணு வரைபடத்தில் உள்ள பிரச்னைகளை அட்லஸ் நிரப்புகிறது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அதன் திரிபுகளை வகைப்படுத்த இது உதவும். இதனால் ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிதல், நோய் முன்னேற்றம், சிகிச்சை விளைவுகளால் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இதுகுறித்து புற்றுநோய் மரபியல் மற்றும் மூலக்கூறு சிகிச்சைக்கான உயர்சிறப்பு மைய தலைவர் மகாலிங்கம் கூறியதாவது: உலக அளவில் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பல்வேறாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் மரபணு ரீதியாக புற்றுநோய் திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயாளிகளுக்கு தனித்துவமான சிகிச்சைகள் வழங்க முடியும். நமது நாட்டிலேயே ஒரே வகை புற்றுநோயில் சில மரபணு திரிபுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை அனைத்தையும் அனைவரும் பார்த்துக் கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
இதில் இறப்பு விகிதத்தை குறைக்க முடியுமா என்பது நீண்ட காலத்திற்கு பின்புதான் தெரியவரும். இருப்பினும் முன்னதாகவே கண்டறிந்தது, சிகிச்சைக்கு பின்பான வாழ்வை மேம்படுத்த முடியும். பல நாடுகளில் இதுபோன்று தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கொடுத்து இருக்கக் கூடிய தரவுகள் அனைத்தும் வெளிநாட்டு தரவுகளாக இருக்கிறது. இப்போது மார்பக புற்று நோய்க்கு தரவுகளை பெற்றுள்ளோம். தொடர்ந்து அடுத்தடுத்து நுரையீரல், கணையம், குடல் என அனைத்து வகை புற்றுநோய் குறித்து தரவுகளும் மரபணு திரிபுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு அதனை வெளியிட உள்ளோம். இவை அனைத்தும் நோயாளிகளின் முழு சம்மதத்துடன் மட்டுமே பெறப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.