அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் எர்ணாவூர் மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய அவலம்
எண்ணுார்:திருவொற்றியூர் மண்டலம், நான்காவது வார்டு, எர்ணாவூரில், பஜனை கோவில் தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு, திருவீதியம்மன் நகர், பிருந்தாவன் நகர், மேட்டு தெரு என, 15க்கும் மேற்பட்ட நகர்களில், 30,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள மக்களின் வசதிக்காக, மாகாளியம்மன் கோவில் தெருவில், ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன், பல்வேறு காரணங்களால் ஆரம்ப சுகாதார மையம், சுனாமி குடியிருப்பு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது.
மாறாக, இங்குள்ள கட்டடத்தில், மாத்திரைகள் மற்றும் மருந்துகள் மட்டுமே, செவிலியர் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணியர் பரிசோதனை, புறநோய்களுக்கான சிகிச்சை போன்ற மருத்துவ சேவை பெற, எண்ணுார், திருவொற்றியூர் அல்லது சுனாமி குடியிருப்பு பகுதிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
எர்ணாவூர், திருவீதியம்மன் கோவில் முதல் தெருவில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையமும், ஓராண்டாக திறக்கப்படவில்லை.
மேலும், எர்ணாவூரில் யாரேனும் உயிரிழந்தால், உடல் அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு, ஆல் இந்தியா ரேடியோ நகர் சுடுகாடு, நேதாஜி நகர் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும்.
சுனாமி குடியிருப்பு ஆரம்ப சுகாதார மையம், ஆல் இந்தியா ரேடியோ நகர் சுடுகாடு, நேதாஜி நகர் சுடுகாடு செல்வதற்காக, எர்ணாவூர் கேட் சந்திப்பில் உள்ள நான்கு ரயில் தண்டவாளங்களை கடக்க வேண்டிய நிலை உள்ளது.
தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் மோதி பாதசாரிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. தவிர, நேதாஜி நகர், ஆல் இந்தியா ரேடியோ நகரில் இருந்தும், எர்ணாவூருக்கு பள்ளி மாணவர்களும் வந்து செல்கின்றனர்.
அவர்களும், ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடக்கின்றனர். எர்ணாவூர் மேம்பாலம் வழியாக செல்ல வேண்டுமானால், பல கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியுள்ளது.
மணலி – எம்.எப்.எல்., சந்திப்பில் இருந்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால், மேடான பகுதிகளுக்கு குடிநீர் ஏறுவதில் சிக்கல் இருந்து வந்தது.
அதற்கு தீர்வாக, நெய்தல் நகர் நீரேற்று நிலையத்தில் இருந்து, எர்ணாவூருக்கு குடிநீர் வினியோகம் செய்ய குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சாலையை துண்டித்து குழாய் அமைக்கும் பணி, இன்னும் நிறைவடையவில்லை.
இதுபோல், மருத்துவம், கல்வி, சுடுகாடு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக, எர்ணாவூர் மக்கள் ஏங்கி தவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, எர்ணாவூர் ரயில்வே கேட் அருகே, தண்டவாளங்களை கடக்கும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார மையத்தை, மருத்துவர் உள்ளிட்ட வசதிகளுடன், எர்ணாவூரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெய்தல் நகர் நீரேற்று நிலையத்தில் இருந்து, எர்ணாவூருக்கு குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சுரங்கப்பாதை அவசியம்
எர்ணாவூரில் இருந்து, இறந்த நபரின் உடலை கொண்டு செல்ல, ரயில் தண்டவாளங்களை ஆபத்தான நிலையில் கடக்க வேண்டிய நிலை உள்ளது. ரயில்கள் குறுக்கிடும் நேரங்களில், உடலை தோளில் சுமந்தபடி காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. மேலும், பள்ளி மாணவர்களும், தண்டவாளத்தை கடக்க வேண்டியுள்ளது. அதனால், இப்பகுதியில், சுரங்கம்பாதை அவசியம்.
– ஆறுமுகம், பிருந்தாவன் நகர், எர்ணாவூர்.
மருத்துவமனை தேவை
எர்ணாவூர், மாகாளியம்மன் கோவில் தெருவில், ஏற்கனவே ஆரம்ப சுகாதார மையம் இயங்கி வந்தது. ஆனால், தற்போது மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. கர்ப்பிணியர் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு, எண்ணுார், சுனாமி குடியிருப்பு மற்றும் திருவொற்றியூருக்கு அனுப்புகின்றனர். அதனால், பெரும் சிரமம் ஏற்படுகிறது.
எர்ணாவூரிலேயே ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும்.
– தனலட்சுமி, ஆதிதிராவிடர் காலனி, எர்ணாவூர்.