ஓ.எம். ஆரை மையப்படுத்தி புதிய பத்திரப்பதிவு ஆபீஸ்
சோழிங்கநல்லுார்:சென்னை மாவட்டத்தில் உள்ள 17 தாலுகாக்களில், சோழிங்கநல்லுார் தாலுகாவின் பரப்பு அதிகம். இங்கு, 16 கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன.
இதில், பெருங்குடி, சீவரம், ஒக்கியம்துரைப்பாக்கம், காரப்பாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் 1 மற்றும் 2 ஆகிய, 11 கிராம எல்லைகளுக்கு உட்பட்ட சொத்து உள்ளிட்ட ஆணவங்கள், நீலாங்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
கொட்டிவாக்கம் கிராமம், அடையாறு பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ளது. இந்த கிராமங்கள், இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதிகளை உள்ளடக்கியவை.
இப்பகுதிகள் அபார வளர்ச்சி அடைந்து வருவதுடன், ஓ.எம்.ஆரில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகரிப்பதால், ஓ.எம்.ஆரை மையப்படுத்தி ஒரு பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க வேண்டும் என, பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஓ.எம்.ஆரில் உள்ள பெருங்குடி, சீவரம், ஒக்கியம்துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் 1, 2 ஆகிய, 7 கிராமங்களை மையப்படுத்தி, சோழிங்கநல்லுார் என்ற பெயரில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகம் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இ.சி.ஆரில் உள்ள நீலாங்கரை பத்திரப்பதிவு அலுவலகம், நீலாங்கரை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி மற்றும் அடையாறில் உள்ள கொட்டிவாக்கம் ஆகிய ஐந்து கிராமங்களை மையப்படுத்தி செயல்படும்.
ஓ.எம்.ஆரை மையப்படுத்தி, புதிய பத்திரப்பதிவு அலுவலகத்திற்கான உத்தரவு விரைவில் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.