குன்றத்துாரில் பாதாள சாக்கடை திட்டம். .. ரூ.800 கோடி !:அரசிடம் அறிக்கை சமர்ப்பித்த நகராட்சி
குன்றத்துார்:சென்னை மாநகரின் எல்லை பகுதியில் வளர்ந்து வரும் நகராட்சியாக குன்றத்துார் உள்ளது. பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில், திருநாகேஸ்வரர் கோவில் இங்கு அமைந்துள்ளது. குன்றத்துாரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சாலையான வண்டலுார் — மீஞ்சூர் சாலை அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் கொண்டுள்ள குன்றத்துார் நகராட்சியில், அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கையும், மக்கள் பெருக்கமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இங்குள்ள 30 வார்டுகளில் 80,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், வளர்ந்து வரும் நகரத்திற்கு அடிப்படை தேவையான பாதாளா சாக்கடை திட்டம் இல்லை.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக நீர் நிலைகளில் கலந்தும், பல இடங்களில் காலி நிலத்தில் தேங்கியும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக குன்றத்துார் நகராட்சியில் திருநாகேஸ்வரம் உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுகள் கால்வாயில் வெளியேற்றப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, குன்றத்துார் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சுத்திகரிப்பு நிலையம்
இதையடுத்து, 800 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, நகராட்சி நிர்வாகம் சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில், 170 கோடி ரூபாய் மதிப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நாளொன்றுக்கு 1 கோடி லிட்டர் கழிவு நீரை சுத்திகரித்து, அடையாறு கால்வாயில் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குன்றத்துார் நகராட்சி பாதாள சாக்கடை திட்ட அறிக்கை குறித்து, வரும் 20ம் தேதிக்கு மேல், அரசு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதன்பின் பாதாள சாக்கடை திட்டம் குறித்து முழுமையான தகவல் வெளியாகும்’ என்றார்.
ஊராட்சிகள் இணைப்பு?
குன்றத்துார் நகராட்சி பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு 800 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில், குன்றத்துார் அருகே உள்ள கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தரப்பாக்கம், தண்டலம், கொல்லச்சேரி, சிறுகளத்துார், திருமுடிவாக்கம், இரண்டாம்கட்டளை, பெரியபணிச்சேரி உள்ளிட்ட 20 ஊராட்சிகளையும் இணைத்து, ஒருங்கணைந்த பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பாதாளச் சாக்கடை திட்டம் அமைந்தால், குன்றத்துார் நகராட்சி மட்டுமின்றி புறநகரில் உள்ள ஊராட்சிகளின் கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குன்றத்துார் நகராட்சி
*மொத்த வார்டுகள் 30*
மக்கள் தொகை 70,000*
பரப்பு 9:00 ச.கி.மீ.,
குன்றத்துார் மக்களின் பல்லாண்டு கோரிக்கைக்கு பின், நகராட்சி நிர்வாகம் சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டத்திற்கு தேவையான 800 கோடி ரூபாய், அரசு ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில், விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் சுற்றுவட்டார ஊராட்சிகளும் பயன்பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.