கிளாம்பாக்கம் நடை மேம்பால பணி முடக்கம் நில பிரச்னையை தீர்ப்பதில் அலட்சியம்
சென்னை,தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த வளாகம், 2023 டிச., 30ல் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
தற்போதைய நிலவரப்படி, இந்த நிலையத்துக்கு தினசரி, 65,000 பேர் முதல், ஒரு லட்சம் பேர் வரை இங்கு வந்து செல்கின்றனர்.
இதில், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. அதனால், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இந்த ரயில் நிலையத்துக்கு மக்கள் வந்து செல்லவும், ஜி.எஸ்.டி., சாலையை கடக்கவும் கிளாம்பாக்கத்தில் நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சி.எம்.டி.ஏ., போக்குவரத்து குழுமமான ‘கும்டா’ இணைந்து, இதற்கான பணிகளை மேற்கொண்டன. இங்கு, 1,312 அடி நீளத்துக்கு, 74.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2024 மார்ச், 24ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்காக, ஜி.எஸ்.டி., சாலை, ரயில் பாதை இடையே, 1.5 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. ஆனால், கையகப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதால், நடைமேம்பால பணி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைப்பது மிக மிக அவசியமான ஒன்று. ஜி.எஸ்.டி., சாலையை தினசரி பொதுமக்கள் கடக்க சிரமப்படுகின்றனர்.
இதற்கு தீர்வாக உருவாக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதில், நில உரிமையாளரின் வழக்கால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில், இவ்வழக்கை விரைந்து முடிக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில உரிமையாளரிடம் சமரசம் பேசி முடிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டினால் பிரச்னை விரைவாக முடிவுக்கு வரும். இதை, சி.எம்.டி.ஏ.,வுக்கு தெரிவித்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.