லஞ்சத்தில் திளைத்த மாநகராட்சி அதிகாரிகள்… களையெடுப்பு! பட்டியலில் சிக்கியுள்ள 100 பேரிடம் விசாரணை
சென்னை :சென்னை மாநகராட்சியில், கட்டட வரைபட அனுமதியில் விதிமீறல், ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு, கவுன்சிலர்களுடன் இணைந்து ஊழல், லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடும் அதிகாரிகளை களையெடுக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில், 100க்கும் மேற்பட்டோர் மூன்றாம் நிலை நகரங்களுக்கு மாற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, தனித்த சட்டத்தின்படி இயங்கி வந்தது. இதனால், நகராட்சி நிர்வாகத் துறையின் உத்தரவுகள், சென்னை மாநகராட்சிக்கு பொருந்தாத நிலை நீடித்து வந்தது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தவிர்த்து, மற்ற பொறுப்புகளில் வகிப்போர், தவறு செய்தாலும், சென்னை மாநகராட்சிக்கு உள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 2023ல் நகர்ப்புற உள்ளாட்சி விதி, திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நகராட்சி நிர்வாகத்தின் கீழ், சென்னை மாநகராட்சியும் கொண்டு வரப்பட்டது.
மேலும், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளில் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற விதியும், அமலுக்கு வந்தது.
இந்த திருத்தத்திற்கு பின், சுகாதார அதிகாரிகள் சிலர், சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர். அதேநேரம், பெரும்பாலான சுகாதார அதிகாரிகள் இடமாறுதலுக்காக காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, கட்டட வரைபட விதிமீறல், ஒப்பந்ததாரரிடம் லஞ்சம், ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டடங்களை பின்புறத்தில் திறந்து விடுதல் உள்ளிட்ட விதிமீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் குறித்த பட்டியலை, மாநகராட்சி சேகரித்துள்ளது.
அதில், குற்றம் உறுதி செய்யப்பட்ட 11 உதவி பொறியாளர்கள் முதற்கட்டமாக, மூன்றாம் நிலை நகராட்சிகளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாக, கட்டாய பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல், பல்வேறு நிலைகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல், பணியாளர்கள் வரையிலானோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, புகாரின் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது:
மாநகராட்சியில் பெரும்பாலான அதிகாரிகள், 20 ஆண்டுகளுக்கு மேல், சென்னையில் அருகருகே வார்டுகளிலேயே பணியாற்றி வருகின்றனர்.
இதனால், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து கொண்டு, முறைகேடிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, விதிமீற கட்டப்படும் கட்டடங்களுக்கு பணம் பெறுதல், ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த, பின்பக்க கதவை திறந்து கொள்ள பணம் பெறுதல், ஒப்பந்தாரர்களிடம் பணம் பெறுதல் உள்ளிட்ட முறைகேடில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சுகாதார அலுவலர்கள் சிலரும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் அளிக்கவும், மயான பூமிகளில் ஒப்பந்ததாரருடன் இணைந்தும் லஞ்சம் பெறுகின்றனர்.
இவர்கள் குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், உண்மை தன்மை ஆராயப்பட்டு வருகிறது.
இதில், குற்றம் உறுதி செய்யப்படுவோர் உடனடியாக, மூன்றாம் நிலை நகரங்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கையாக மாற்றப்படுவர். மற்ற மாநகராட்சிகளில் பணியாற்றுவோர், சென்னைக்கு பணியமர்த்தப்படுவர்.
இதன் வாயிலாக, சென்னை மாநகராட்சியில் ஊழல் செய்யும் அதிகாரிகள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், மற்றவர்களுக்கும் ஒரு பயம் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.