வீட்டு வசதி வாரிய மனையை போலி ஆவணம் மூலம் அபகரித்த 4 பேர் கைது

சென்னை, பிப்.1: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ₹80 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பிரசாத் அளித்த புகாரில், சென்னை திருமங்கலம் ஜெ.ஜெ.நகர் கோட்டம் முகப்போர் மேற்கு திட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் குறைந்த வருவாய் பிரிவு-1ல் உள்ள வீட்டு மனையை, போலி ஆவணங்கள் தயார் செய்து சிலர் அபகரித்து விட்டதாகவும், அதை மீட்டுத் தர வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண், மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டியன், ஜெகதீசன், தனலட்சுமி, நவீன்ராஜ் ஆகியோர் அரசுக்கு சொந்தமான வீட்டு மனையை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்திய மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *