பாலவேடு ஏரி பசுமை பூங்காவாக மாற்றப்படுமா? விதி மீறல்களை தடுக்க நடவடிக்கை அவசியம்

ஆவடி,ஆவடி அடுத்த பாலவேடு, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. இங்குள்ள பாலவேடு ஏரி, 398 ஏக்கர் பரப்பு உடையது. ஆவடி வட்டத்தில் மூன்றாவது பெரிய ஏரியாகும். 2013 – 14ம் ஆண்டிற்கு பின், ஏரி துார்வாரப்படவில்லை.

வண்டலுார் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டிய இந்த ஏரி பகுதியில், கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் அங்கு செயல்படும் தனியார் மீன் பண்ணையால் தண்ணீரும் மாசடைந்துள்ளது.

ஒவ்வொரு மழை காலத்திலும், மழை நீர் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி வீணாகிறது. குறிப்பாக, கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், ஜாஸ்மின் நகர், ஏ.என்.எஸ்., நகர் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் பாய்ந்து, பாக்கம், கிருஷ்ணா கால்வாய் வழியாக புழல் ஏரியை சென்றடைகிறது.

எனவே, ஏரியை துார் வாரி, வரத்து கால்வாய் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

ஏரியில் மயானம்

பாலவேடு ஏரியின் ஒரு பகுதியை, சுற்றுவட்டார மக்கள் காலங்காலமாக சுடுகாடாய் பயன்படுத்தி வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தாம்பரம் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது, சட்ட விரோதமாக ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் எரிமேடை அமைக்கப்பட்டது.

கடந்த 2023ல், ஊராட்சி நிர்வாகம் மயானத்திற்கு செல்ல சாலை அமைக்க ஜல்லி கொட்டியது. இது குறித்து, நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக அவை தடுத்து நிறுத்தப்பட்டது.

தற்போது ஈமச்சடங்கு செய்வதற்கு ஏதுவாக, பாலவேடு ஊராட்சி சார்பில், 1.98 லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு தோண்டி கை பம்ப் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் ஏரியை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், எரிமேடையின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதில் முனைப்பு காட்டி வருவது, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பாலவேடு ஏரியை மீட்டு பசுமை பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

படகு சவாரி துவக்கலாம்!

பாலவேடு ஊராட்சி, ஆவடி மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நீர்வளத்துறை, ஏரியை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றி, ஏரியை ஆழமாக துார்வாரி நீர் வரத்து கால்வாய் அமைக்க வேண்டும்.

வெளிவட்ட சாலையை ஒட்டி ஏரி அமைந்துள்ளதால், மக்களின் பொழுதுபோக்கு பூங்காவாக மாறும். மேலும், ஏரியில் பசுமை பூங்கா அமைத்து படகு சவாரி ஏற்படுத்தினால், அரசுக்கு வருமானம் கிடைக்கும். இந்த வருமானம் வாயிலாக, ஏரியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாம்.

– சமூக ஆர்வலர்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *