சவாரிக்கு ரூ.20 கூடுதல் கட்டணம் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது
கோயம்பேடு முகப்பேரைச் சேர்ந்தவர் சுமதி; சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு – பி சாலையில் இருந்து, ‘ரேபிடோ’ மொபைல் போன் செயலி வாயிலாக ஆட்டோ ‘புக்’ செய்தார்.
அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், அதில் குறிப்பிட்டிருந்த கட்டணத்தை விட கூடுதலாக, 20 ரூபாய் கேட்டுள்ளார். ‘மப்டி’யில் இருந்த சுமதி அதற்கு மறுத்துள்ளார். இதனால், ஆட்டோ ஓட்டுநர் சவாரியை கேன்சல் செய்ய முற்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர் வேகமாக ஆட்டோவை இயக்கவே, சுமதி தடுமாறி கீழே விழுந்துள்ளார். இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார், ஆட்டோ ஓட்டுநரான பாடியைச் சேர்ந்த மணிகண்டன், 37, என்பவரை கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.