பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாக்க ரூ.10 கோடி
சென்னை, சென்னையில், 400க்கும் மேற்பட்ட கட்டடங்கள், பாரம்பரிய கட்டடங்களாக வகைபடுத்தப்பட்டு உள்ளன. இந்த கட்டடங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, பாதுகாக்கும் நடவடிக்கைகளை, சி.எம்.டி.ஏ., எடுத்து வருகிறது.
சென்னை மெரினாவில் உள்ள பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பதற்காக, 10 கோடி ரூபாயில், பாரம்பரிய வழித்தட திட்டம் என்ற புதிய திட்டத்தை, சி.எம்.டி.ஏ., உருவாக்கியுள்ளது. இதற்காக, மெரினாவில் உள்ள கட்டடங்கள் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டன.
இதன்படி, காவல் துறை தலைவர் அலுவலகம், ராணிமேரி கல்லுாரி, விவேகானந்தர் இல்லம், சென்னை பல்கலை மெரினா வளாகம், மாநில கல்லுாரி, பொதுப்பணித்துறை அலுவலகம், எழிலகம், சென்னை பல்கலை செனட் கட்டடம், சென்னை பல்கலை வளாகம் ஆகிய கட்டடங்கள், இந்த புதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.
இவற்றை ஒட்டி பூங்காக்கள், புதிய சிற்பங்கள், விளக்கு அலங்காரங்கள் ஏற்படுத்தப்படும்.
இதற்கான பணிகள் துவங்கியுள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்