சொகுசு ‘ பிரீமியம் பஸ்கள் ‘ எம். டி .சி.,யில் புதிய திட்டம்
சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், தினமும், 3,454 பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும் 2030ல், மாநகர பஸ்களின் தேவை, 7,000மாக இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
அதற்கேற்ப, பஸ் வசதியை பூர்த்தி செய்யும் வகையில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக தயாரிக்கப்படும் வழித்தடங்களில்,முதற்கட்டமாக, 1,000க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படும் என, தெரிகிறது.
இதையடுத்து, சென்னையில் தனியார் பங்களிப்போடு, பிரீமியம் சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான, அரசாணை சமீபத்தில் வெளியானது.
இதுகுறித்து, மாநகரபோக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் தேவை கருதி, மும்பை, டில்லியில் தனியார் பங்களிப்போடு, பிரிமியம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் வசதியை, சென்னையிலும் அறிமுகம் செய்வதற்கான சாத்திய கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
இதையடுத்து, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் வழித்தடங்களில், இந்த வகை பஸ்களை இயக்க உள்ளோம். வால்வோ, பென்ஸ் போன்ற நவீன சொகுசு பஸ்களாக இருக்கும்.
இவை 2+2 சொகுசு இருக்கைகள், வைபை வசதி, ‘சிசிடிவி’ கேமராக்கள், மொபைல்போன் சார்ஜிங் வசதி, ஜி.பி.எஸ்., மற்றும் அவசர நேரத்தில் தொடர்பு கொள்ளும் வசதி இருக்கும். பயணியர் தேவை உள்ள வழித்தடங்களில் மட்டுமே, குறித்த நேரத்தில் செல்லும் வகையில் இயக்கப்படும்.
இதில், மாநகர பஸ்களைவிட கட்டணம் அதிகமாக இருக்கும். ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் எடுத்து, இந்த பஸ்சில் பயணிக்க முடியும்.
ஓட்டுநர் மட்டுமே இருப்பார்; நடத்துநர் இருக்க மாட்டார். முக்கிய பஸ் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். பயணியர் தேவைக்கு ஏற்ப, பிரீமியம் பஸ்களை இயக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.