ரூ.20 கோடி மதிப்பு 6 கிரவுண்ட் நிலம் வணிகர் சங்க தலைவர் ஆக்கிரமிப்பு கொளத்துாரில் மாநகராட்சி மீட்டது
கொளத்துார்,கொளத்துார், ராஜமங்கலம், செந்தில் நகர் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான ஆறு கிரவுண்ட் நிலம் உள்ளது.
இதை, அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஆக்கிரமித்து, கடைகளை கட்டி, ‘டாஸ்மாக்’ உள்ளிட்டவற்றுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக, மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி முருகன் தலைமையில், கொளத்துார்வருவாய்த்துறையினர் நேற்று, இரண்டு பொக்லைன் இயந்திரங்களுடன், செந்தில் நகருக்கு சென்றனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கினர்.
இதற்கிடையே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மத்திய சென்னை மாவட்ட தலைவர் தேவராஜ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி வடசென்னை மேற்கு பகுதி செயலர் ஹேமாவதி உள்ளிட்ட பலர், மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மாநகராட்சியின் மீட்பு நடவடிக்கை மாலை 4:00 மணிக்கு மேல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மத்திய சென்னை மாவட்ட தலைவர் தேவராஜ் மற்றும் சிலர், மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்திருந்தனர். அதன் மதிப்பு 20 கோடி ரூபாய்’ என்றனர்.
நிருபர்களுக்கு, தேவராஜ் அளித்த பேட்டி:
நோட்டீஸ் வழங்காமல் இடித்துள்ளனர். 2000ல், இந்த இடத்தை கஷ்டப்பட்டு வாங்கினேன். சொத்துக்கான ஆவணங்கள் 1936 முதல் என்னிடம் உள்ளன. அதிகாரிகளிடம் ஆவணங்கள் இல்லை.
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால், மாநகராட்சியையும், போலீசாரையும் பயன்படுத்தி, அராஜகமாக என் சொத்தை கைப்பற்ற நினைக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.