திரு முல்லைவாயல் , சுதர்சன் சாலையில் குடியிருப்பு வீட்டில் அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு

ஆவடி, ஆவடி அருகே, பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகள் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சுதர்சன் சாலையில் ‘வி.ஜி.என்., ஸ்டாபோர்டு’ என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இதன் ‘கே — பிளாக்’கின் 4வது மாடியில், பிரபல சர்ச்சை சாமியார் அன்னபூரணி என்பவருக்கு, சொந்தமான வீடு உள்ளது.

இங்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த சாமுவேல் எபினேசர், 34, என்பவர், வாடகைக்கு வசித்து வந்தார்.

ஆஸ்திரியா நாட்டில் மருத்துவம் படித்த இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

இந்த வீட்டில் இருந்து, நேற்று முன்தினம் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து, குடியிருப்பு செயலர் துரை மாதவன், போலீசில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில், ஆண் மற்றும் பெண் சடலம்

கிடந்தது.

தடயவியல் துறை உதவி இயக்குநர் தாரா, சடலத்தை பரிசோதனை செய்தார். இதையடுத்து, போலீசார் இருவரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேகத்தின்படி போலீசார், வீட்டில் வாடகைக்கும் வசிக்கும் சாமுவேல் எபினேசரை பிடித்து விசாரித்தனர்.

இதில் தெரிய வந்ததாவது:

சாமுவேல் எபினேசருக்கு, சமூக வலைதளம் வாயிலாக ஆன் சிந்தியா, 37, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், தந்தை சாமுவேல் சங்கர், 78, உடன் வேலுாரில் வசித்து வந்தார்.

சாமுவேல் சங்கர், டயாலிசிஸ் நோயாளி என்பதால், சிகிச்சை பெற அடிக்கடி சென்னை வந்து சென்றுள்ளனர். அப்போது, சாமுவேல் எபினேசருக்கும் ஆன் சிந்தியாவிற்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.

சென்னை வந்து, அடிக்கடி சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் சாமுவேல் எபினேசர் வீட்டில் தங்கி, சிகிச்சைக்கு சென்று வந்தனர்.

இதற்கிடையே, வெளிநாடு செல்ல சாமுவேல் எபினேசர் திட்டமிட்டிருந்தார். அந்நேரம், உடல்நலக்குறைவால் ஆன் சிந்தியாவின் தந்தை உயிரிழந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஆன் சிந்தியா, சாமுவேல் எபினேசரை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் சாமுவேல் தள்ளியதில், கீழே விழுந்து ஆன் சிந்தியா மயக்கமானார்.

சாமுவேல் எபினேசர், அவரை பரிசோதனை செய்தபோது, அவர் இறந்தது தெரிந்தது. உடனே, சாமுவேல் எபினேசர் ஏ.சி.,யை ‘ஆன்’ செய்து, வீட்டை பூட்டி சொந்த ஊருக்கு தப்பி சென்றுள்ளார்.

இவ்வாறு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனை முடிவில், தலையில் அடிபட்டு அவர் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சாமுவேல் எபினேசரை கைது செய்தனர்.

சாமுவேல் எபினேசர் மருத்துவர் என்பதால் இறந்த உடல்களை பாதுகாக்க சவக்கிடங்கில் பயன்படுத்தப்படும் ‘பார்மலில்’ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். மேலும், ‘ஏசி’ அதிக ‘கூலிங்’கில் இருந்ததால், இந்நாள் வரை துர்நாற்றம் வீசாமல் இருந்திருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில், பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *