குறித்த காலத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை உள்துறை செயலாளர் இன்று ஆஜராகி விளக்கம் தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: வழக்குகளின் மீது காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், ஜனவரி 31ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல. தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை. இதனால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுகிறது. நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளது.
நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை. வழக்குப்பதிவு செய்யக் கோரியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது காவல் துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா எனக் கேள்வி எழுப்பி ஜனவரி 31ம் தேதி உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.