பள்ளியில் காலை உணவு திட்டத்தை தனியாருக்கு விட காங்கிரஸ் எதிர்ப்பு: விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என மேயர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் 6வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் எம்.எஸ்.திரவியம் நேரமில்லா நேரத்தில் பேசியதாவது: உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது. காலை உணவு தயாரிக்கும் பெற்றோரின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த திட்டத்தை முதல்வர் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது இந்த திட்டத்தில் காலை உணவு தயாரிப்பதை தனியாருக்கு விடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த திட்டத்தில் தனியார் நுழைவதை ஏற்க முடியாது. எனவே தனியாருக்கு டெண்டர் விடும் முடிவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
துணை மேயர் மகேஷ் குமார்: தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சியில் காலை உணவு திட்டத்தை தனியார் மூலம் செயல்படுத்துவது அரசின் முடிவு. காலை உணவுத் திட்டத்தில் அம்மா உணவகங்கள் மூலமாக சமைக்கப்பட்டு அனுப்பப்பட்டது. போதிய சமையல் கூடம் இல்லாத காரணத்தினால் தனியாருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரும், துறை அமைச்சர் கே.என்.நேரு கவனத்திற்கும் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆணையர் குமரகுருபரன்: அரசின் உத்தரவுப்படி தான் டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசாணையில் தெளிவாக ஒப்பந்தபுள்ளி வழங்கக் கோரி வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது வரை சென்னை மாநகராட்சி மூலமாகத்தான் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இப்போது நாம் செயல்படுத்தக்கூடிய காலை உணவுத் திட்டம் அம்மா உணவகம் மூலமாக நாம் செய்யவில்லை. 356 பள்ளிகளுக்கு 35 இடங்களில் சமைத்து அனுப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் காலை உணவு திட்டத்தை தனியார் மூலம் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. 2023 டிசம்பரில் டெண்டர் விட ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
மேயர் பிரியா: இதுவரை மாநகராட்சி மூலம் காலை உணவு திட்டத்தை நல்ல முறையில் பின்பற்றி வந்தாலும் வரக்கூடிய காலகட்டத்தில் அதற்குரிய முடிவுகள் எடுக்கப்படும். அரசாணையின்படி டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கான முடிவு கலந்து
ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.