தொழுநோய் விழிப்புணர்வு முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று கிண்டி, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில், தொழுநோய் ஒழிப்பு தினம் 2025 முன்னிட்டு, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பின் தொழுநோய் கண்டறிதல் முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஒவ்வொரு வருடமும் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை 15 நாட்கள் தொழுநோய் சிறப்பு விழிப்புணர்வு முகாம் மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழுநோயால் குழந்தை பாதிப்பு, அங்க குறைபாடு மற்றும் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள 133 வட்டாரங்களில், 27 நகரப்பகுதிகளில், 50,76,701 வீடுகளில், 2,01,08,585 மக்களுக்கு தொழுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் வரும் 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை 15 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட முகாமில் 320 புதிய தொழு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 40% மேல் அங்க குறைபாடு உள்ள தொழுநோயாளிகளுக்கு மாத உதவித் தொகையை ரூ.1000லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி முதல்வர் அறிவித்தார்.

அதன்படி கடந்தாண்டில் மட்டும் ரூ.28.08 கோடி செலவில் 11,702 நபர்களுக்கு மாத மாதம் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.3.83 லட்சம் செலவில் 15,759 சுய பாதுகாப்பு பெட்டகங்களும், ரூ.38 லட்சம் செலவில் 9,462 எம்சிஆர் காலனிகள் மற்றும் 44,661 நபர்களுக்கு ஒரு ரிபார்ம்பிசின் மாத்திரைகளும், ரூ.11.76லட்சம் செலவில் 98 மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 10 தொழுநோய் மறுவாழ்வு இல்லங்களில் 1001 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 அரசு தொழுநோய் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சைகளும் கூட்டு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 10,000 மக்கள் தொகையில் 0.6 % பேர் தொழுநோயினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அதுவே தமிழ்நாட்டை பொறுத்தவரை 0.3% பேர் பாதிக்கப்பட்டு இருந்ததை தற்போது 0.27% பேராக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய முழுவதும் குழந்தை தொழு நோயாளிகளின் 5.18% ஆக உள்ளது. இதுவே தமிழகத்தில் 5.79 % ஆக இருந்ததை தற்போது 5.37% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய முழுவதும் அங்க குறைபாடு உள்ளவர்கள் 10 லட்சம் மக்கள் தொகைக்கு 1.6% ஆக உள்ளது. தமிழகத்தல் 0.9% ஆக இருந்தது, தற்போது 0.35% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *