சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தல் : சந்தேக நபர்களிடமிருந்து அழைப்பு வந்தால் உடனடியாக முடக்க வேண்டும்
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்ட அறிக்கை: கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு பண இழப்பு ஏற்படுவதாக புதிய வகை மோசடி குறித்து சைபர் கிரைம் காவல் நிலையங்களில் புகார்கள் வருகின்றன. இந்த வகை மோசடியில் முதலில் செல்போனுக்கு +91 5XXXXXXI போன்ற எண்களில் இருந்து 6 இலக்க (123-456) வாட்ஸ்அப் ஆக்டிவேசன் கோடு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர் அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலமாக தொடர்பு கொள்ளும் நபர், தன்னுடைய 6 இலக்க வாட்ஸ்அப் ஆக்டிவேசன் கோடு தவறுதலாக உங்களுடைய செல்போன் எண்ணுக்கு வந்துள்ளது.
அதனை தனக்கு அனுப்பும் படியாக மெசேஜ் அனுப்புவார். அதை உண்மை என்று நம்பி பலர் தங்களுடைய செல்போனுக்கு வந்த 6 இலக்க வாட்ஸ்அப் ஆக்டிவேசன் எண்ணை சந்தேக நபருக்கு கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு அடையாளம் தெரியாத நபருக்கு 6 இலக்க வாட்ஸ்அப் ஆக்டிவேசன் எண்ணை கொடுத்த உடன் சந்தேக நபர் உங்களுக்குத் தெரியாமல் உங்களுடைய செல்போன் எண்ணை ஹேக் செய்து புதியதாக வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கை துவக்குவார். அதனால் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு முடக்கம் செய்யப்படும். பிறகு ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்டிலிருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் அனுப்புவது போன்று வாட்ஸ்ஆப் ஆக்டிவேசன் கோடு கேட்டு மெசேஜ் அனுப்பி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாட்ஸ்ஆப் கணக்குகளையும் ஹேக் செய்து விடுகின்றனர்.
எனவே இதுசம்மந்தமாக பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆக்டிவேசன் கோடு எண்ணை செல்போன் எண் உரிமையாளர் அல்லாத பிற நபர்களின் எண்களுக்கு அனுப்ப வேண்டாம். உங்களுடைய செல்போன் எண்ணிற்கு வரும் 6 இலக்க ஆக்டிவேசன் கோடுகளை எந்த நபருக்கும் கொடுக்காதீர்கள். சந்தேக நபர்களிடமிருந்து அழைப்புகள் வந்தால் அந்த எண்களை உடனடியாக நிராகரித்து விடும்படியாகவும் அல்லது முடக்கம் செய்யவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார். மேலும் சைபர் குற்றங்கள் மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https:/cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.