முகலிவாக்கம் சுகாதார மையம் சீரமைக்க ரூ.2.05 கோடி நிதி
முகலிவாக்கம்: ஆலந்துார் மண்டலம்முகலிவாக்கத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை பொது மருத்துவமும், கண், பல், நீரழிவு, தோல், எலும்பு, மகப்பேறுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
முகலிவாக்கம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து, தினமும் 350க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த, நீண்ட நாட்களாக பகுதிவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில், ஆலந்துாரில் மகப்பேறு மருத்துவம் பார்க்கும் வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதால் முகலிவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வாய்ப்பு இன்றி போனது.
இருப்பினும், 2.05 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக 1.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணி துவக்கப்பட்டு உள்ளது.