தைராய்டு கண் அலர்ஜிக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை
சென்னை,தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் தன்னுடல் தாக்கு நோயால் கண் அழற்சி ஏற்பட்ட பெண்ணுக்கு, ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த சிகிச்சையால் எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள் குணப்படுத்தி உள்ளனர்.
மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை நிபுணர் சஞ்சீவ் மொஹந்தி கூறியதாவது:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண், தன் கண் பகுதியில் கடுமையான வீக்கம் மற்றும் வலியுடன் அனுமதிக்கப்பட்டார். தைராய்டு சார்ந்த ‘ஆர்பிடோபதி’ என்ற பாதிப்பும் இருந்தது. அதாவது, தன்னுடல் தாக்கு நோயால், கண்களை சுற்றி அழற்சி மற்றும் வீக்கம் ஏற்படும்.
இதனால் அப்பெண்ணுக்கு, இமையை மூடவும், உணவு விழுங்கவும் முடியவில்லை. இப்பிரச்னைக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை வாயிலாக தைராய்டு சுரப்பி நீக்கப்பட்டது. மற்றொரு புறம், எண்டோஸ்கோபி முறையில் கண்களை சுற்றியுள்ள எலும்புகளில் இருந்த அழுத்தம் குறைக்கப்பட்டது. இதன் பயனாக, சில நாட்களில் அப்பெண் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இவ்வாறு அவர் கூறினார்.