ரூ.495 கோடியில் தொழில் பூங்கா அனுமதியை நிறுத்திய தீர்ப்பாயம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், சிப்காட் தொழில் பூங்காவுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, சூரப்பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட கிராமங்களில், 528 ஏக்கரில், 495 கோடி ரூபாயில் தொழில் பூங்கா அமைக்க, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம், 2024 ஏப்., 22ல், தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது.

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து, சூரப்பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பிரவீனா, ஜெகன்குமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஏழு பேர், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

எந்த நோக்கத்திற்காக தொழில் பூங்கா அமைக்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தை மறைத்து, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு உள்ளதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:

சூரப்பூண்டி, வாணியமல்லி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டம், பல கட்டங்களாக பிரிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரே திட்டமாக செயல்படுத்தினால், சுற்றுச்சூழல், சமூக, பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தாக்கம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டியிருக்கும்.

இவற்றை தவிர்ப்பதற்காக, ஒரே தொடர்ச்சியான நிலப்பரப்பில் அமைக்க திட்டமிடப்பட்ட தொழில் பூங்காவை, பல சிறிய திட்டங்களாக பிரித்து செயல்படுத்த சிப்காட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சூரப்பூண்டி, வாணியமல்லி பகுதியில், 528 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க, உரிய ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது.

சில திட்டங்களை செயல்படுத்த சிப்காட் நிறுவனம் திட்டமிட்டிருந்தால்,

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து உரிய அனுமதியை பெற வேண்டும். இது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *