பருத்திப்பட்டு பகுதியில் வேகத்தடை அமைப்பு
ஆவடி, ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலை 4 கி.மீ., துாரம் கொண்டது. இதில், தினமும் 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையின் பருத்திப்பட்டு பகுதியில், பருத்திப்பட்டு – சோராஞ்சேரி சாலை இணைகிறது. இப்பகுதியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இந்தநிலையில், ஆவடி – பூந்தமல்லி சாலையில், இரு மார்க்கத்திலும் வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.
வாகனங்களின் வேகத்தை குறைக்க, வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள், நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் அளித்தனர். இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 18ம் தேதி செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, இரு தினங்களுக்கு முன், பூந்தமல்லி – ஆவடி சாலை மார்க்கத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாளில் மறு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.