ரவீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு மிரட்டல்
வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், வியாசர்பாடி பாலகிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 21 கிரவுண்ட் நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2022 செப்., 22ம் தேதி, நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.
போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சொத்து கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. பின் அங்கு அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் துாய்மை பணி நடக்கிறது. இதை கோவில் பணியாளர்களான நந்தகுமார், பார்த்திபன், முத்தமிழ்செல்வி ஆகியோர், நேற்று முன்தினம் பார்வையிட சென்றனர்.
அப்போது அங்கு வந்த செல்வராஜ், அவரது மகன் சதீஷ் மற்றும் முருகன் ஆகியோர், கோவில் பணியாளர்களை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், பாலகிருஷ்ணன் தெருவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் உடைத்தனர். இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.