தாமரை குளத்தில் வீடு இழந்தோர் விபரம் ‘பயோ மெட்ரிக்’ முறையில் சேகரிப்பு
எண்ணுார்எண்ணுாரில் வ.உ.சி., நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நகர், சத்தியவாணி முத்து நகர் இடையே, 5.32 ஏக்கர் பரப்பில் தாமரை குளம் இருந்தது.
நாளடைவில் ஆக்கிரமிப்பால் குளம் சுருங்கியது. இது குறித்து செல்வராஜ்குமார் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், ‘தாமரை குளத்தை ஆக்கிரமித்த 53 கட்டடங்களை அகற்ற வேண்டும்’ என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்தாண்டு இரு தவணைகளாக, 20 வீடுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, மூன்றாவது தவணையாக, கடந்த 24ம் தேதி முதல், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் ’60 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் தங்களை ஆக்கிரமிப்பாளர் எனக்கூறி, வெளியேற சொல்வது நியாயமில்லை’ என, அப்பகுதியில் குடியிருந்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள், திருவொற்றியூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் ஆகியோர், மாற்று இடம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனால் பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகளுக்கு மாற்றாக, வீடுகள் வழங்க ஏதுவாக, ‘பயோ மெட்ரிக்’ முறையில், விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
அதன்படி, ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு, கருவிழி, கைரேகை போன்றவை சேகரிக்கப்படுகின்றன.
தொடர்ந்து, குடியிருந்த வீட்டின் முன், அடையாள எண் மற்றும் விபரங்கள் எழுதிய அட்டையுடன் புகைப்படமும் எடுக்கப்பட்டு, பின், இடிக்கப்படும் வீட்டிற்கு, குறியீடு போடப்படுகிறது.
அதன்படி, ‘ஸ்மார்ட் கார்டு’ அடிப்படையில், 78 பேர் வரை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.