கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவியர் சுற்றுச் சூழல் கள ஆய்வில் அசத்தல்

எண்ணுார்சென்னை, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், ‘விப்ரோ எர்தியன் – 2024’ தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் பங்கேற்கும், மாநில அளவிலான சுற்றுச்சூழல் போட்டி நடைபெற்றது.

பல்லுயிர் தன்மை உட்பட பல்வேறு தலைப்புகளில், மாணவர்கள் கள ஆய்வு செய்து, ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். மூன்று மாத கால அவகாசத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவியர், கே.காவியா, கே.கீர்த்திகா, ஜெ.பிரதீபா, டி.சுருதிகா, எஸ்.ஜனனி ஆகியோர், பல்லுயிர் தன்மை என்ற தலைப்பில், கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, பள்ளி வளாகம், அதை சுற்றியிருந்த பகுதிகளில், மரம், செடி, கொடிகள், பூச்சியினம், குரங்கு, வெட்டுக்கிளி, வினோத மைனா உள்ளிட்டவற்றை படமாக்கி, 60 பக்க அளவில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

மாநில அளவில் 142 ஆய்வுகள் சமர்பிக்கப்பட்ட நிலையில், மண்டல அளவில் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் அணி உட்பட 18 அணிகள் தேர்வாகின.

தேர்வான அணிகள், தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலை வளாகத்தில் கள ஆய்வுகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.

‘பவர் பாயின்ட்’ முறையில், தாங்கள் கள ஆய்வு மேற்கொண்ட விபரங்கள், ‘பூமி நமக்கானது மட்டுமல்ல; அனைத்து உயிர்களுக்கானது’ என்பதை, கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவியர் தெளிவாக விவரித்தனர்.

சி.பி.ஆர்., கல்வி நிலையம் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, சுதாகர் மற்றும் மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ராம் மனோகர் ஆகியோர், வெற்றிப் பெற்ற மாணவியரை பாராட்டி, சான்றிதழ் பரிசுகள் வழங்கினர்.

மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியை அனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் கண்டம்மாள், கோல்டன் மெல்பா உள்ளிட்ட ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *