கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு இட மாற்றம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜன.30: கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில் ₹362.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள புதிய டவர் பிளாக் கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு (சீமாங்) கட்டிடம் மருத்துவமனையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் பூமிக்கு அடியில் செல்கின்ற பாதை இந்த மருத்துவமனையின் வழியே செல்கிறது. அந்த வகையில் சீமாங் கட்டிடத்தின் கீழே 27 மீட்டர் அளவில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே சிறு பாதிப்புகள் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

இந்த கட்டிடத்தைப் பொறுத்தவரை ₹362.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர், நிலைய மருத்துவ அலுவலர் வாணி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தமிழரசு, மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *