திருடனை விரைந்து பிடிக்க போலீசிடம் நாடகமாடிய பெண்
கொளத்துார், பட்டாபிராம், ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்தவர் கனகதுர்கா, 29; ஏழு மாத கர்ப்பிணி. இவர், மறைந்த தந்தையின் இறுதிச்சடங்கிற்காக, கடந்த 25ம் தேதியன்று கொளத்துார், வேல்முருகன் நகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்
அன்று மாலை இறுதிச்சடங்கு முடிந்த நிலையில், வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் வீட்டில் புகுந்து, கத்தி முனையில் கனக துர்காவின் மாமியார் ராஜேஸ்வரி மற்றும் உறவினர் மலர்கொடி ஆகியோரை மிரட்டியுள்ளார்.
அவர்கள் இருவரையும், அறையில் தள்ளி, கனக துர்காவை கத்தி முனையில் மிரட்டி, ஒரு லட்ச ரூபாய் மற்றும் இரண்டு மொபைல்போன்களையும் பறித்து தப்பியுள்ளார். இது குறித்து கொளத்துார் போலீசார் விசாரித்தனர்.
இதில், சம்பந்தப்பட்ட கொளத்துார், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த குமார், 38, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரிக்கையில், இரண்டு மொபைல் போன்கள் மட்டுமே எடுத்ததாகவும், பணம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளான்.
தொடர்ந்து போலீசார், கனக துர்காவிடம் விசாரித்தனர். இதில், ‘மொபைல் போனுடன் பணமும் திருடு போனால் தான் போலீசார் விரைந்து செயல்படுவர் என்பதால் பணமும் திருடு போனதாக கூறினேன்’ என தெரிவித்துள்ளார்.
புகார் கொடுத்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட திருடனை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைத்தனர். இரண்டு மொபைல்போன்களும் மீட்கப்பட்டன.