நீதிபதி முன் செருப்பு வீச்சு கோர்ட்டில் ரவுடி ரகளை
பூந்தமல்லி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன், கடந்தாண்டு அக்., 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர், தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத், 42.
பயங்கரவாதிகளுடன் இவருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம் எழுந்ததால், இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து கருக்கா வினோத், நேற்று அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்ற கூண்டில் நின்ற கருக்கா வினோத், ‘தன்னை ஜாமினில் வெளியே விட வேண்டும்’ என, ஆவேசமாகப் பேசி தன் காலில் கிடந்த செருப்பை கழற்றி, ஒன்றன்பின் ஒன்றாக நீதிபதி முன் வீசினார்.
ஒரு செருப்பு, நீதிபதியின் மேசை மீது விழுந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருக்கா வினோத் மீதான வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி, நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கருக்கா வினோத் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.