பொழுதுபோக்கு தலமாகிறது கடப்பாக்கம் ஏரி ரூ.58.32 கோடியில் புனரமைப்பு தீவிரம்
மணலி, சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம் 16வது வார்டில், 149 ஏக்கர் பரப்பில் கடப்பாக்கம் ஏரி உள்ளது. ஏரிக்கு, விச்சூர், செம்மணலி ஏரியில் இருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் வடிகால் வழியாக மழைநீர் வரத்தும் உள்ளது.
ஏரி நிரம்பும் பட்சத்தில், விச்சூர் பிரதான சாலையொட்டி இருக்கும், ராஜாங்கால் ஓடை வழியாக உபரி நீர் வெளியேறி, புழல் உபரி கால்வாயில் கலக்கும். தவிர, ஏரிக்கு தெற்கு புறமாக இருக்கும் கலங்கல் வழியாக, உபரி நீர் வெளியேறி, அரியலுார் ஏரிக்கும் செல்கிறது.
கன்னியம்மன்பேட்டை, விச்சூர், செம்பியம் மணலி, கடப்பாக்கம், ஆண்டார்குப்பம், காமராஜபுரம் சுற்றுவட்டார விவசாயிகள், கடப்பாக்கம் ஏரி நீர் பாசனத்தையே நம்பியுள்ளனர்.
ஏரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க, கிழக்கு புறமாக நான்கு இடங்களில், மின் மோட்டார்கள் மதகுடன் கூடிய வாய்க்கால் உள்ளன.
இந்த ஏரியை புனரமைக்க, சுற்றுவட்டார மக்களிடம், இருமுறை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், விவசாயிகள், கடைசி ஏக்கர் நிலம் இருக்கும் வரை, ஏரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என, திட்டவட்டமாக கூறினர்.
அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். மேலும், இந்த புனரமைப்பு பணிகளால், விவசாயம் செழிக்கும் எனக் கூறினர்.
அதைத்தொடர்ந்து, கொசஸ்தலை ஆறு வடிநில திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார் உள்ளிட்ட ஆறு மண்டலங்களில், 769 கி.மீ., துாரம் ஒருங்கிணைந்த வடிகால், குளங்கள் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, கடப்பாக்கம் ஏரியை புனரமைக்கும் பணி, துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், 1.10 மில்லியன் கன மீட்டர் அளவு தண்ணீர் தேங்கும் நிலையில், 2.2 மில்லியன் கனமீட்டர் அளவு தண்ணீர் தேங்கும் வகையில், ஆழப்படுத்தி புனரமைப்பு பணிகள் நடக்கின்றன.
ஆசிய வளர்ச்சி வங்கியின் சுற்றுச்சூழல் மானிய பங்கு நிதி, 50.91 கோடி ரூபாய்; சென்னை மாநகராட்சியின் 7.42 கோடி ரூபாய் என, 58.32 கோடி ரூபாய் செலவில், இப்பணிகள் நடக்கின்றன.
இதில், கரைகளை பலப்படுத்துதல், ஏரி துார் வாருதல், சிறுவர் பூங்கா, கழிப்பறைகள், நடைபாதை வசதி உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கும்.